search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரையில் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை"

    நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனமுடைந்த தாய், தனது 2 குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மதுரை:

    மதுரை டி.வி.எஸ்.நகர், சத்தியசாய் நகர், முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (வயது 37). லாரி டிரைவரான இவருக்கும், மைக்கேல் ஜீவா (36) என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இது காதல் திருமணம் ஆகும். இவர்களுக்கு ஹரிதா (4), ஹரீஸ்கிஷோர்குமார் (3) என்ற 2 குழந்தைகள் இருந்தனர்.

    மைக்கேல் ஜீவாவுக்கும், வேறு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக ராஜா சந்தேகப்பட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது.

    மனமுடைந்த மைக்கேல் ஜீவா தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். தான் இறந்து விட்டால் பிள்ளைகள் அனாதையாகி விடுமே என்று கருதிய அவர் குழந்தைகளையும் கொன்று விடுவது என்று முடிவு எடுத்தார்.

    அதன்படி நேற்று இரவு மைக்கேல் ஜீவா, தனது 2 குழந்தைகளையும் பிளாஸ்டிக் உறைகளால் முகத்தில் மூடினார். இதில் மூச்சுத் திணறி குழந்தைகள் இறந்தன. அதன் பின்னர் மைக்கேல்ஜீவா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்வதற்கு முன்பு மைக்கேல் ஜீவா எழுதிய கடிதங்களை போலீசார் கைப்பற்றினர். அதில் கூறியிருப்பதாவது:-

    பலியான குழந்தைகள் ஹரிதா, ஹரிஸ்கிஷோர்குமார்.

    “எனக்கு யாருடனும் கள்ளத்தொடர்பு இல்லை. எனக்கு செய்த துரோகத்துக்கு நீ (கணவன்) அனுபவிப்பாய், அதை நான் பார்க்கத் தான் போகிறேன்.

    என்னை எவ்வளவோ கேவலப்படுத்தி இருக்கிறாய். என்னையும், என் குழந்தைகளையும் தவறாக பேசியதால் நொறுங்கி விட்டேன். இதுக்கெல்லாம் நீயும் சரி, உன் குடும்பமும் சரி அனுபவிப்பீங்க” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    “அனாதை போல் எங்களை கருதி எரித்து விடவும். என் கணவர் கொள்ளி போடக்கூடாது” என்று தனது சகோதரிகள் ராணி, தீபா ஆகியோருக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் மைக்கேல் ஜீவா குறிப்பிட்டுள்ளார்.

    இந்த பரிதாப சம்பவம் சத்திய சாய் நகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×